அயோத்தி ராமர் கோயிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசாரணை நடத்தியுள்ளது.
மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், “அயோத்தி என்பது நம் அனைவரின் நம்பிக்கைக்கும் சனாதன தர்மத்திற்கும் ஒரு அடையாளமாகும்.அயோத்தியின் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். ஸ்ரீ ராமரின் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை தொடங்கப்பட்டது.
உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறேன். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது” என்றார்.