புதுச்சேரி,
வாடகைக்கு எடுத்து சென்ற காரை ரூ.6 லட்சத்துக்கு விற்று மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை முருங்கப்பாக்கம் துலுக்காத்தம்மன் நகரை சேர்ந்தவர் யோக பாலா (வயது 28). அவருக்கு சொந்தமான காரை அவரது நண்பர் உதயா என்பவர் கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி கேரளா செல்வதற்காக வாடகைக்கு எடுத்து சென்றார்.
இதற்காக முன்பணம் ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டு சென்றார். காரை எடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் உதயா கொடுக்காமல் காலம் கடத்தி வந் தார். அவரை தொடர்பு கொண்டாலும் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தார்.
இதற்கிடையே உதயா 2 தவணையாக ரூ.10 ஆயிரம் யோக பாலாவிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியின் மூலம் பார்த்த போது கார் தேனி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்த போது யோக பாலாவின் காரை ரூ.6 லட்சத்திற்கு உதயா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் யோக பாலா அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து புதுவை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.