தேசிய செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.. கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவிப்பு

கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றப்பின் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் நேற்று பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு வந்து தனது அலுவலகத்தில் உள்ள இருக்கையை தொட்டு வணங்கி அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மந்திரிசபை கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட 13 மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலவச பஸ் பாஸ்

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு ஏற்கனவே இலவச பஸ் பயணம் அமலில் உள்ளது. அதே போல் தங்களுக்கும் இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று மாணவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். நான் எங்கு சென்றாலும் இந்த கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்தனர்.

மந்திரிசபை கூட்டம்

இதனை மனதில் வைத்து இன்று (நேற்று) எனது தலைமையில் நடை பெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து ஒரு முடிவு எடுத்துள்ளோம். கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை அனைத்து மாணவர்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு பெயரிட உள்ளோம். இதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அப்படியே அனுமதித்தால் மாணவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது கடினம். அதனால் தகுதியான மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்கும். இதற்கு எவ்வளவு நிதி செலவானாலும் இதை நாங்கள் அமல்படுத்துவோம்.

பாரத் ஜோடோ இளைஞர் சங்கம்

மேலும் பாரத் ஜோடோ இளைஞர் சங்கம் என்ற பெயரில் 10 ஆயிரம் இளைஞர்கள் சுய உதவிக்குழுக்கள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கி நடுத்தர இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதுதவிர அரசு துறைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். ஏற்கனவே அரசு துறைகளில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்.

ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படும்

அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்பதை அறிவிப்போம். தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான வழிமுறைகள் இன்னும் ஒருமாதத்துக்குள் வகுக்கப்பட்டு முறைப்படுத்தப்படும். அதில் வேலைவாய்ப்புக்காக பெயர்களை பதிவு செய்யும் இளைஞர்களுக்கு விரைவில் வேலை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

கிராம பஞ்சாயத்து அளவில் ஒவ்வொரு பாரத் ஜோடோ இளைஞர் சங்கத்துக்கும் தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் தலைமை பண்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒவ்வொரு இளைஞரும் பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.