கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி 200 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல் மந்திரியாக பதவியேற்றார். சுவேந்து அதிகாரி பதவியேற்ற பின்னர் நடந்த அமைச்சவரை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதில் குறிப்பாக அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவற்றுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 1 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் முதியோர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
மாநிலப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கு வங்கத்தில் இயங்கும் குறுகிய மற்றும் நீண்ட தூர அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகள் இலவசமாகப் பயணிக்கத் தகுதி பெறுவார்கள்.
சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (SDO) அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கியூஆர் குறியீடு, புகைப்படம் மற்றும் பயனாளியின் விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் வரை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவை அடையாள அட்டைகள் உள்ளிட்ட செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணங்களைக் காண்பிப்பதன் மூலம் பெண் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அடையாள ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, நடத்துநர்கள் பெண் பயணிகளுக்கு "பூஜ்ஜிய மதிப்பு டிக்கெட்டுகளை" வழங்குவார்கள். என்று அதில் கூறப்பட்டுள்ளது.