தேசிய செய்திகள்

இன்று முதல் ஆந்திராவில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்

கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும்.

அமராவதி,

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதையும், நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன்படி, கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் சுமார் ஒரு லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் 11,488 விசைத்தறி இயந்திரங்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிவாய்ந்த கைத்தறிநெசவாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.8,640 சேமிக்க முடியும். அதேவேளையில், விசைத்தறி இயக்குபவர்கள் ஆண்டுதோறும் ரூ. 21,600 வரை சேமிக்க இயலும்.

நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ. 4,000 ஆக உயர்த்துதல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குச் சேமிப்பு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்குதல் மற்றும் நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 90 சதவிகிதம் வரை மானியம் வழங்குதல் போன்றவை அந்த திட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.