கோழிக்கோடு,
கோழிக்கோட்டில் இலவசமாக திருமணத்துக்குப் பதிவு செய்யும் நிகழ்ச்சிக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால், விண்ணப்பங்களை அச்சிட்டு கொடுக்க கோவில் நிர்வாகிகள் திக்குமுக்காடினர்.
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கரந்தூர் பகுதியில் ஹரஹர மகாதேவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இலவசமாக திருமணப் பதிவு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெறும் என சமூக வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருமண வரன் தேடி 1,500 பேர் வரக்கூடும் என்று கருதி, அதற்கான விண்ணப்பங்கள் அச்சடித்து வைத்திருந்தனர். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க இருந்தது. ஆனால், அதிகாலை முதலே கோவிலுக்கு மக்கள் வர தொடங்கினர். சிலர் கண்ணூர், வயநாடு, பாலக்காடு போன்ற மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து வந்தனர். முகாமில் கலந்துகொள்வதற்காக, நகரத்தில் தங்குமிடம் எடுத்து தங்கியவர்களும் இருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் கோவில் நிர்வாகிகள் திக்குமுக்காடி போயினர்.
வாழ்க்கை துணையை தேடி பதிவு செய்வதற்கு ஏராளமானோர் திரண்டதால் கோவில் நிர்வாகிகள் ஜெராக்ஸ் கடைக்கு சென்று, விண்ணப்பத்தை 500-க்கும் மேற்பட்ட நகல் எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த விண்ணப்பங்களும் சற்று நேரத்தில் தீர்ந்து போனது.
இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் அருகே உள்ள அச்சகத்திற்கு அவசரமாக சென்று, 4 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சிட்டு எடுத்து வந்தனர். அப்போதும் கூட்டத்தால் கோவில் நிரம்பி வழிந்தது. கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வரை மக்கள் நின்றிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
4 மணி நேரம் விண்ணப்பங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், மக்கள் கூட்டத்தால் மாலை வரை சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 80 சதவீதம் ஆண்கள் தங்களது வாழ்க்கை துணையை தேடி பதிவு செய்தனர். இதில் 80 சதவீதம் பேர் 30 வயதுக்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் 40 மற்றும் 50 வயதுகளில் இருந்தனர். சில பெண்கள் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்தனர். ஒரு பெண் 5 மணி நேரம் காத்திருந்து தனது மகனுக்காக வரன் தேடி பதிவு செய்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது. "45 மற்றும் 50 வயதுடையவர்கள் உள்பட திருமணம் ஆகாதவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது" என்றனர்.