தேசிய செய்திகள்

பெண்களுக்கு இலவச பயணம் - அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய கேரள அரசுக்கு தனியார் பேருந்து நிறுவனங்கள் கோரிக்கை

இலவச பயண அறிவிப்பு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தனியார் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது 'இந்திரா உத்தரவாதம்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கேரளாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய அரசுக்கு தனியார் பேருந்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தனியார் போக்குவரத்து நிறுவனங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், இது மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனியார் பேருந்து நிறுவனங்கள் அமைப்பின் மாநில தலைவர் டி.கோபிநாதன் கூறுகையில், “இது ஒருதலைபட்சமான அறிவிப்பு. இலவச பயணம் காரணமாக பெண்கள் அனைவரும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யத் தொடங்கினால், தனியார் பேருந்துகளில் மாணவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள்.

அது தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் வருமானத்தை பெருமளவு பாதிக்கும். இந்த துறையே ஒரே இரவில் மறைந்துவிடக்கூடும். இத்தகைய ஒரு முக்கிய கொள்கை முடிவை செயல்படுத்துவதற்கு முன்னர், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் அரசு கலந்துரையாட வேண்டும். இந்த திட்டத்தின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு ஒரு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.