தேசிய செய்திகள்

சிறைவாசம் முதல் சிம்மாசனம் வரை.. டி.கே.சிவக்குமாரின் அரசியல் பயணம்

தனது 23-வது வயதில் 1985-ம் ஆண்டு சாத்தனூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் டி.கே.சிவக்குமார் போட்டியிட்டார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளதையடுத்து டி.கே.சிவக்குமார் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

"கனகபுரா பண்டே' (பண்டே என்றால் பாறை என்று அர்த்தம்) என பெயர் பெற்ற டி.கே.சிவக்குமார், 1962-ம் ஆண்டு கனகபுராவில் பிறந்தார். அவர் தனது தொடக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றினார். அதன்பிறகு பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார். அவர் தனது 23-வது வயதில் 1985-ம் ஆண்டு சாத்தனூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் மூலம் அவர் பெயர் பெற்றார்.

அதன் பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் அவர் அதே சாத்தனூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 1991-ம் ஆண்டு அவர் சிறைத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இளம் வயதில் மந்திரி பதவியை அடைந்தார். அதைத்தொடர்ந்து 1994, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி

தொகுதி மறுவரையறைக்கு பிறகு சாத்தனூர் தொகுதி கனகபுரா தொகுதி என்று பெயர் மாற்றம் பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2013, 2018, 2023-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

சித்தராமையா முதல் முறையாக முதல்-மந்திரியாக (2013-18) இருந்த போது அவரது மந்திரிசபையில் மின்சாரத்துறை மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றினார்.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நகர வளர்ச்சித்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அவர் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக பணியாற்றினார்.

நெருக்கடி நிலை

அந்த நேரத்தில் கட்சியின் மாநில தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்தார். 2018-ம் ஆண்டு முதல் இதுவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் தற்போது வரை துணை முதல்-மந்திரியாக இருக்கிறார். 2002-ம் ஆண்டு விலாஷ்ராவ் தேஷ்முக் தலைமையிலான மராட்டிய மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி தாவும் நிலை இருந்தது.

குதிரை பேரம்

அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு அழைத்து வந்து டி.கே.சிவக்குமார் குதிரை பேரத்தில் சிக்காமல் பாதுகாத்து ஆட்சியை தக்க வைக்க உதவினார். இதனால் காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமாருக்கு நற்பெயர் கிடைத்தது. அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் சிக்கும் நிலை இருந்தது.

இதையடுத்து 42 குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து டி.கே.சிவக்குமார் தனது பாதுகாப்பில் தங்க வைத்தார். அவர்களை வெற்றிகரமாக பாதுகாத்து குஜராத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் சுமார் ரூ.8 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது.

கைது

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து டி.கே.சிவக்குமாரை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. சுமார் 6 மாதங்கள் அவர் சிறைவாசம் அனுபவித்த பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கு ரத்து செய்யப்பட்டது. அவர் சிறையில் இருந்தபோது சோனியா காந்தி சிறைக்கு சென்று அவரை சந்தித்து தைரியம் கூறினார்.

நாட்டில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் சிக்கல் ஏற்பட்டாலும் அங்கு பிரச்சினையை தீர்த்து வைக்க டி.கே.சிவக்குமார் கட்சி மேலிடத்தால் அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக மாறியுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையாவின் மந்திரிசபையில் இடம் பிடிக்க டி.கே.சிவக்குமார் போராடினார். தற்போது அவரையே வீழ்த்திவிட்டு டி.கே.சிவக்குமார் சிம்மாசனத்தில் அமருகிறார்.