தேசிய செய்திகள்

இனிமேல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு 3 சதவீத ஜி.எஸ்.டி. வரி!

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியும் ஒரே மாதிரியான வரி நடைமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதி முகமைகள் மூலம் கொண்டுவரப்படும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கு இனி 3 சதவீத வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமல்

இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா டெல்லியில் கூறுகையில், வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி.) வரிவிலக்கு மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததாகத் தெரிவித்தார். இந்தச் சலுகையை அரசு நீட்டிக்காததால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியும் ஒரே மாதிரியான வரி நடைமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இறக்குமதி வழிமுறைக்கு மட்டும் வரிச்சலுகை மூலம் முன்னுரிமை கிடைப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பட்டியல் வெளியீடு

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் வரிவிலக்குச் சலுகை முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்ககம், அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்களின் புதிய பட்டியலை வெளியிட்டது. இருப்பினும், வரிவிலக்கை நீட்டிப்பதற்கான அரசாணை புதுப்பிக்கப்படவில்லை.

2017-ல் அறிமுகம்

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் மூலம் தங்கம் தடையின்றி இறக்குமதி செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், கடந்த 2017-ம் ஆண்டு முதலில் தங்கத்துக்கு வரிவிலக்குச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இந்தச் சலுகை வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது அந்தச் சலுகை முடிவுக்கு வந்துள்ளதால், மூன்று உலோகங்களின் இறக்குமதிக்கும் 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT