திருவனந்தபுரம்,
குருவாயூர் கிருஷ்ணன் சன்னதியில் தினமும் எத்தனையோ திருமணங்கள் நடக்கும். ஆனால் இன்று நடைபெற்ற சுருதி - சந்தீப் திருமணம் மட்டும் எல்லோரது பார்வையையும் கவர்ந்தது. அதுமட்டுமல்ல எல்லோரது மனமும் இனியாவது இந்த தம்பதிகள் மகிழ்ச்சியான வாக்கையை வாழ வேடும் என்று வேண்டிக்கொண்டது. அதற்கு காரணம் சோதனைமேல் சோதனையைத்தான் சுருதி இத்தனை காலமும் தாங்கி வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2024 ஜூலை 30 அன்று வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஸ்ருதி தனது பெற்றோர் மற்றும் தங்கை உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களைப் பரிதாபமாக இழந்து தவித்தார். அந்தப் பேரழிவிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஸ்ருதிக்கு, அவளது சோகமான சூழ்நிலையில் ஆறுதலாக இருந்த ஜென்சன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த சாலை விபத்தில் அவரது தனது ஆசை வருங்கால கணவர் ஜென்சனும் உயிரிழந்தார். அந்த விபத்தில் ஸ்ருதியும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினாலும், அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தின.
குடும்பத்தையும், உற்ற துணையையும் இழந்து தவித்த ஸ்ருதிக்கு கேரள அரசு சார்பில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மானந்தவாடியைச் சேர்ந்த சந்திப், ஸ்ருதியின் கடந்த கால வாழ்க்கை மற்றும் சோகங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, அவருக்குத் துணையாக இருக்க முன்வந்தார். இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்களின் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், குருவாயூர் கோயிலில் நடைபெற்ற இவர்களின் திருமண விழாவில், முன்னாள் அமைச்சரும், வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவருமான ராஜன் கலந்துகொண்டு ஸ்ருதிக்கு ஆதரவாக முன்னின்று நடத்தி வைத்தார். மேலும் ஏராளமான பொதுப்பலப் பிரதிநிதிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ருதி, தனது வாழ்வின் அத்தனை சிரமங்களையும் அறிந்த பின்பு தன்னை ஏற்றுக்கொண்ட சந்திப்புடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மேலும், தனது கடினமான காலங்களில் தங்களது குடும்பத்திற்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.