தேசிய செய்திகள்

ரெயிலில் அமர இடம் கிடைக்காமல் விரக்தி... வெடிகுண்டு புரளியை கிளப்பிய பயணி

ரெயில்வே போலீஸ் படை, வெடிகுண்டு செயலிழப்பு குழு, பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டன.

லக்னோ

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நோக்கி ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த ரெயில் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரை கடந்து, லக்னோ நகரில் எய்ஷ்பாக் ரெயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, ரெயிலில் இருந்த நபர் ஒருவர் திடீரென பாம் (வெடிகுண்டு), பாம் என சத்தம் போட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் படை, வெடிகுண்டு செயலிழப்பு குழு, பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டன.

முதல்கட்ட விசாரணை

அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் எய்ஷ்பாக் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதிக்கு படையினர் சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால், இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. அது வெறும் புரளி என தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில், வெடிகுண்டு புரளியை கிளப்பிய நபர் தெலுங்கானாவை சேர்ந்த சைனி ஜாக்கி (வயது 26) என தெரிய வந்துள்ளது. அவருடன் இருந்த சந்தேகத்திற்குரிய மற்றொரு பயணியையும் போலீசார் பிடித்து விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். ரெயிலில் அமர இடம் கிடைக்காத விரக்தியில் அந்த பயணி இதுபோன்று நடந்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீண்ட நேரத்திற்கு பின்னர் கோரக்பூர் நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது.

SCROLL FOR NEXT