தேசிய செய்திகள்

பொலிவியாவில் எரிபொருள் தட்டுப்பாடு; அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - மந்திரிகள் ராஜினாமா

தலைநகர் லா பாஸ் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்தது.

லா பாஸ்,

பொலிவியா இதுவரை இல்லாத மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அங்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் அமெரிக்க டாலர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான மானியங்களை ரத்து செய்யும் புதிய பொருளாதாரக் கொள்கையை அரசு அமல்படுத்தியதால், மே மாத தொடக்கத்தில் இருந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

முன்னாள் அதிபர் ஈவோ மொராலஸின் ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் இணைந்து 80-க்கும் மேற்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளனர். இதனால் தலைநகர் லா பாஸ் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்தது.

போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துவது மற்றும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கருத்து வேறுபாட்டால் அந்த நாட்டின் ராணுவ மந்திரி மார்செலோ சலினாஸ் விலகினார். தொடர்ந்து கல்வித் துறை மந்திரி பீட்ரிஸ் கார்சியா, தொழிலாளர் நலத்துறை மந்திரி எட்கர் மொராலஸ் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.