கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை; அமைச்சரவை விரிவாக்கம்?

ஜூன் 2-ம் வாரத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இருக்க கூடும் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது.

புதுடெல்லி

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 5 நாடுகளின் வெளிநாட்டு பயணம் முடிந்து பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், மத்திய மந்திரிகள், தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை, எரிபொருள் வினியோகம் மற்றும் அதிகரித்துள்ள மேற்காசிய பதற்றங்களால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் ஆகியவை பற்றி அரசு கண்காணித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில், நாடு எதிர்கொண்டு வரும் எரிபொருள் தட்டுப்பாடு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முறைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றியும், மேற்காசிய மோதல் தொடர்பாகவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்று, மத்திய மந்திரிகளின் செயல்பாடுகள் பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஜூன் 2-ம் வாரத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இருக்க கூடும் என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என யூகங்கள் கிளம்பியுள்ள சூழலில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பற்றி ஆலோசிக்கப்படுகின்றன.