தேசிய செய்திகள்

பீகாரில் திருமணத்தில் நடைபெற்ற நகைச்சுவை சம்பவம்..மணமகன் வீட்டாரை பழிவாங்கிய பெண் வீட்டார்

மாப்பிள்ளை வீட்டாருக்குத் தனிப்பந்தியில் பரிமாறப்படவிருந்த உணவுகளில், கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய பேதி மருந்துகளை அவர் கலந்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்களை அழைத்து வந்த மாப்பிள்ளை வீட்டாரை பழிவாங்க, உணவில் பேதி மாத்திரையைக் கலந்த மணமகளின் தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண விருந்து

இத்திருமணத்தின் போது, மணமகன் தரப்பில் இருந்து 100 பேர் மட்டுமே திருமண விருந்திற்கு வருவார்கள் என்று மணமகள் வீட்டாரிடம் ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்தன்று சொன்ன பேச்சை மீறி, 100 பேருக்குப் பதிலாக 200-க்கும் மேற்பட்ட உறவினர்களை மாப்பிள்ளை வீட்டார் அழைத்து வந்துள்ளனர். இதனால் பெண் வீட்டார் திட்டமிட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் திருமண பட்ஜெட் முற்றிலும் தலைகீழாக மாறியது.

மாப்பிள்ளை வீட்டாரின் இந்த அலட்சியமான செயலால் ஆத்திரமடைந்த மணமகளின் தந்தை, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டாருக்குத் என தனிப்பந்தியில் பரிமாறப்படவிருந்த பிரியாணி மற்றும் இனிப்பு உணவுகளில் பேதி மருந்துகளை அவர் கலந்துள்ளார்.

திருமண பந்தியில் அமர்ந்து உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் அடுத்தடுத்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வயிறு வலிக்கத் தொடங்கியுள்ளது.

வீடியோ வைரல்

திருமண மண்டபத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அனைவரும் அவசர அவசரமாக மண்டபத்தை விட்டு வெளியேறி, அருகிலிருந்த நதிக்கரையை நோக்கி அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்கினர். மாப்பிள்ளை வீட்டார் நதிக்கரையை நோக்கி ஓடும் காட்சிகளையும் அங்கிருந்த சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் உடல்நல பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.