தேசிய செய்திகள்

‘எதிர்கால போர்கள் மனிதசக்தி சார்ந்ததாக மட்டும் இருக்காது’ - முப்படை தலைமை தளபதி

உற்பத்தியை பெருக்கி, வேகமாக தன்னை தகவமைத்துக் கொள்ளும் நாடு முன்னேறிச் செல்லும் என அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் அஹில்யாநகர் மாவட்டம் ஷீரடியில் பாதுகாப்பு தள வாட உற்பத்தி ஆலை திறப்பு விழா நடந்தது. அதில், இந்தியாவின் முப் படை தலைமை தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

“போர் மற்றும் போர் முறைகள் வேகமான மாற்றத்தை கண்டு வருகின்றன. எதிர்கால போர்முறை என்பது மனிதசக்தி, மரபுரீதியான ஆயுதங்கள் ஆகியவை சார்ந்ததாக மட்டும் இருக்காது. செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், ரோபோட்டிக்ஸ், சைபர் சிஸ்டம்ஸ், விண்வெளி தொழில்நுட்பங்கள், துல்லிய தாக்குதல் ஆயுதங்கள், தகவல் ஆதிக்கம் ஆகியவை எதிர்கால போர்களுக்கு உறுதியான வடிவம் அளிக்கும்.

இனி வரும் நாட்களில், தொழில்நுட்பம், வேகம், புத்தாக்கம் ஆகியவை வெற்றிகரமான செயல்பாடுகளை தீர்மானிப்பவையாக இருக்கும். எதிர்கால போர்கள், பன்முனை போர்களாக இருக்கும். நிலம், நீர், ஆகா யம் ஆகியவற்றுடன் சைபர் ஸ்பேஸ், அறிவாற்றல் சார்ந்த போர் ஆகியவை ஒன்றாக நடக்கும்.

போர்க்களங்கள் என்பது புவியியல் சார்ந்ததாக இல்லாமல், தகவல் கட்ட மைப்பு, டிஜிட்டல் அமைப்பு, சைபர் உள்கட்டமைப்பு ஆகியவை சார்ந்ததாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், தேச பாதுகாப்பு என்பது வீரர்கள், மாலுமிகள். விமானப்படையினர் ஆகியோரின் துணிச்சல் சார்ந்ததாக மட்டும் இருக் காது. தொழில்நுட்பம், தொழில் திறன், உற்பத்தி பலம், புத்தாக்க திறன் ஆகியவை தொடர்பானதாக இருக்கும்.

எந்த நாடு, உற்பத்தியை பெருக்கி, வேகமாக தன்னை தகவமைத்துக் கொள்கிறதோ, அந்த நாடு முன்னேறிச் செல்லும். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடியை எட்டி விட்டது. ஏற்றுமதி சாதனை படைத்துள்ளது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது. 100-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.