தேசிய செய்திகள்

சண்டிகர் என்கவுண்டர்.. பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்

ரவுடியின் தாக்குதலில் இருந்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி சூடு நடத்தினர்.

சண்டிகர்,

இன்று காலை சண்டிகர் மாவட்டத்தில் நடந்த போலீசாருக்கும் ரவுடிக்கு நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குல்லா. பிரபல ரவுடியான இவன் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முகேஷ், சண்டிகரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, இன்று காலையில் அந்த பகுதிக்கு சென்று சுற்றி வளைத்தனர். அப்போது முகேஷ் போலீசாரை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்த தாக்குதலில் இருந்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில், முகேஷின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.