தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நண்பர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு கோவைக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் ஒடிசா சென்று உள்ளனர்.

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகே நின்றிருந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகப்பையை வாங்கி சோதனை நடத்தினர். அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதுபோன்று அவனது அருகில் நின்றிருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரின் புத்தகப்பைகளை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா வந்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

4 பேர் கைது

பிடிபட்ட 3 மாணவர்களுக்கும் சமூக வலைத்தளம் மூலம் நெம்மாறா பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளனர். அதன்படி நண்பர் வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு அந்த வாலிபருடன் கோவைக்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் ஒடிசா சென்று உள்ளனர். அங்கு கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக புத்தகப்பையில் வைத்து சுற்றி வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விசாரணை

இதையடுத்து பிடிபட்ட 3 மாணவர்களையும், அந்த வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.