தேசிய செய்திகள்

ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: 2 ஒடிசா வாலிபர்கள் கைது

தீவிர சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி பாராட்டினார்.

சித்தூர்,

சித்தூர் வழியாக வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சித்தூரிலிருந்து இருவாரம் கிராமத்துக்கு செல்லும் சந்திப்பு பகுதியில் பெங்களூரு சாலையில் சித்தூர் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடநாராயணா, மேற்கு வட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நாயுடு, யாதமரி சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரய்யா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 39 கிலோ கஞ்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த தீட்சித் சுக்ரித் (வயது 22), கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த ரசர்ந்த முரளிதர்புராடி (33) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

சித்தூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கஞ்சா கடத்துவதற்கு உடந்தையாக இருந்து வந்ததாக இருவரும் கூறினர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சித்தூர் கிளை சிறையில் அடைத்தனர். தீவிர சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி பாராட்டினார்.