நகரி,
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்ட போலீசாருக்கு, ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப் படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் பட்டேல் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நிடமானூர் அருகே நேற்று முந்தினம் நடத்தப்பட்ட வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது லாரிக்கு பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு லாரியிலும் கஞ்சா இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் அந்த லாரியையும் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் 2 லாரிகளிலும் சேர்த்து 140 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். உடனடியாக கஞ்சா பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட லாரிகளின் டிரைவர்கள் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் பட்டுகோட்டம்பட்டியை சேர்ந்த டி.பிரதீப் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சாவை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சென்றால் தலா ரூ.30 ஆயிரம் கூலி வழங்கப்படும் என்று கூறியதால் இந்த கடத்தல் பணிக்கு ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் ஒடிசா மாநிலம் கணபதி மாவட்டத்தை சேர்ந்த அரூப் சிங், ராஜேஷ்குமார் சிங் மற்றும் கேரளாவை சேர்ந்த முகமது சொஹைல் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா கடத்தல் கும்பலுக்கு தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.