தேசிய செய்திகள்

எரிவாயு சிலிண்டர் உற்பத்தி கடந்த சில நாட்களில் மட்டும் 10% அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது. இதன்பாதிப்பு உலகம் முழுவதும் தென்பட தொடங்கி உள்ளது.

இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர், வணிக சிலிண்டர் வினியோகத்தை தடை செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் பூரி உடன் ஆலோசனை மேற்கொண்டார். உள்நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு குறித்து மத்திய மந்திரியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்நிலையில், மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எரிவாயு சிலிண்டர் உற்பத்தி கடந்த சில நாட்களில் மட்டும் 10% அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதலால் ஏற்படும் இடையூறுகளை போக்க முழுமையாக மத்திய அரசு தயாராகி விட்டது. உணவக உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதலுக்குப் பிறகு இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் முழு திறனுடன் இயங்கி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியை தவிர வேறு வழிகளில் இருந்து சுமார் 70% கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்யும் பணி துவங்கியுள்ளது. 3 எண்ணெய் நிறுவனங்களை சார்ந்த உயர் அதிகாரிகள் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.