அனந்தபூர்,
ஆந்திராவில் 83 உறுப்பினர்களைக் கொண்ட 'மெகா' கூட்டுக்குடும்பம் தலைமுறைகள் தாண்டி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில், பலர் "திரைகடல் ஓடி திரவியம் தேட" சென்றுவிடுகின்றனர். பெரும்பாலானோர் சொந்த ஊரில் வசிப்பதே இல்லை. வேலைக்காக எங்கெங்கோ போய் வாழத் தொடங்கி விடுகிறார்கள். பலருக்கு பிறந்த ஊரே மறந்துபோய், புகுந்த ஊரே பிரதானமாகி விடுகிறது.
ஆனாலும், இந்த நவீன காலத்திலும் ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக சண்டை சச்சரவு இன்றி ஒரு மெகா கூட்டுக்குடும்பம் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? கிராமத்து மண் வாசனை மாறாத அந்த கூட்டுக்குடும்பத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் குர்லபள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் போய், "முத்தியாலப்பா வீடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், சிறு பிள்ளைகள் கூட வழிகாட்டுவார்கள். சற்று விவரம் தெரிந்தவர்கள் என்றால், அந்தக் குடும்பத்தின் பெருமையை சொல்லி அனுப்பி வைப்பார்கள்.
6 தலைமுறைகளாக ஒற்றுமையாக வாழும் இந்தக் கூட்டுக் குடும்பத்தின் தற்போதைய தலைவராக முத்தியாலப்பா இருந்து வருகிறார். இவர்தான் வயதில் மூத்தவர் என்பதால், இவரது பேச்சுக்கு யாரும் மறுபேச்சு பேசுவது இல்லை. இவர் தபால் துறையில் வேலை பார்த்து வருகிறார். மற்றவர்கள் யாரும் வெளியே சென்று வேலை பார்ப்பது இல்லை. குடும்ப தொழிலான விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றையே கவனித்து வருகின்றனர்.
பரந்து... விரிந்து... ஆலமரமாக உயர்ந்த இந்த கூட்டுக் குடும்பத்தில் முத்தியாலப்பாவை தாண்டி, 4 மைத்துனர்கள், 6 நாத்தனார்கள், 14 மருமகள்கள், 32 குழந்தைகள் என மொத்தம் 83 பேர் இருக்கிறார்கள்.
இன்றைக்கு ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே அவர்களுக்குள் சண்டை வந்துவிடும். ஆனால், ஒரு கூட்டுக்குடும்பத்தில் 83 பேர் இருந்தாலும், ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதால், அங்கு சண்டை சச்சரவுக்கு இடமே இல்லை. "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை" என்பதற்கு அந்த குடும்பத்தில் உள்ளவர்களே எடுத்துக்காட்டு.
அருகருகே உள்ள 3 பெரிய வீடுகளில் இந்த மொத்த குடும்பமும் ஒன்றாக வசித்து வருகிறது. கியாஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் என்ற தற்போதைய நவீன காலத்திலும், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இந்த குடும்பத்தினர் விறகு அடுப்பையே பயன்படுத்தி வருகின்றனர். பெரிய அம்மிக் கல்லில் குடும்ப பெண்களே மசாலா அரைக்கிறார்கள்.
ஒரு நாள் மதிய சாப்பாட்டிற்கு 50 கிலோ அரிசியில் சாதம் வடிக்கிறார்கள். கூட்டு, குழம்பு எல்லாவற்றுக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிதான். அதுவும் மூட்டை மூட்டையாக கொண்டுவந்து கொட்டுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவம் சாப்பிடுகிறார்கள். அன்றைய தினம் ஒரு பெரிய செம்மறி ஆட்டையே இறைச்சிக்காக வெட்டுகிறார்கள். 10 கிலோ கோழிக்கறியையும் சமைக்கிறார்கள்.
தினமும் காலையில் களி, மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி ஆகியவற்றை உணவாக சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி தயாரிக்க ஒரு நேரத்திற்கு 15 கிலோ கோதுமை மாவு இவர்களுக்கு தேவைப்படுகிறது. மாலை வேளைகளில் பஜ்ஜி, இனிப்பு வகைகளும் தயாரித்து, குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். 6 தலைமுறைகள் ஒற்றுமையாக வாழ்வது குறித்து குடும்பத் தலைவர் முத்தியாலப்பா கூறியதாவது:-
எங்களுடைய தாத்தா காலத்தில் இருந்தே ஒன்றாக வசித்து வருகிறோம். எதிர்காலத்திலும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம். பால்வாடி முதல் கல்லூரி வரை எங்கள் வீட்டு குழந்தைகள் படித்து வருகிறார்கள். பாகுபாடின்றி அனைவரும் அரசு பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்கிறார்கள். ஒற்றுமையாக வாழ்வதால், 65 ஏக்கராக இருந்த நிலத்தில் உழைத்து, அதை 120 ஏக்கராக அதிகரித்துள்ளோம். மிளகாய், கத்தரிகாய், தக்காளி, தர்பூசணி, பப்பாளி, நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறோம்.
எங்களுக்கு சொந்தமாக 4 பேருந்துகளும் இருக்கிறது. அதையும் சுற்றுலா செல்பவர்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறோம். விவசாயம், கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் எங்கள் குடும்ப உறுப்பினர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
எங்கள் குடும்பத்தில் ஒரே நேரத்தில் 9 திருமணங்கள் நடந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உறவுமுறை ஒத்துவந்தால், எங்கள் பிள்ளைகளுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணம் செய்து வைக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்து எங்கள் ஊரே பாராட்டுகிறது. எதிர்காலத்திலும் அதையே தொடர விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
83 பேர் கொண்ட மெகா கூட்டுக்குடும்பமாக இவர்கள் வசித்தாலும் 3 வீடுகளுக்கும் சேர்த்து மாத மின் கட்டணம் ரூ.2,700 தான் வருகிறதாம். ஏனென்றால், பெரும்பாலும் மின்சாரத்தை பயன்படுத்துவதே கிடையாதாம். தலைமுறைகள் தாண்டிய இந்த கூட்டுக் குடும்பத்தை நாமும் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.