தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா: ஜனாதிபதி ஏற்பு

ஜார்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதி நிறைவடைந்தது.

புதுடெல்லி,

மத்திய சிறுபான்மையினர் நலன், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடி

மத்திய பா.ஜனதா அரசில் சிறுபான்மையினர் நலன், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக இருந்தவர் ஜார்ஜ் குரியன். கேரளாவைச் சேர்ந்த இவர், பா.ஜனதாவின் தொடக்கக்கால உறுப்பினர் ஆவார். பல்வேறு பதவிகளை கட்சியில் வகித்துள்ளார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது இவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதற்கு ஏதுவாக அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

மந்திரி பதவி ராஜினாமா

இந்த நிலையில் ஜார்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதி நிறைவடைந்தது. அவரது பெயர் மீண்டும் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

இதையடுத்து ஜார்ஜ் குரியன், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அதனை ஜனாதிபதி நேற்று ஏற்றுக் கொண்டார். இதுகுறித்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது.

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்

ஜார்ஜ் குரியனைப் போல மத்திய உணவு பதப்படுத்தல் துறை இணை மந்திரி ரவ்நீத் சிங் பிட்டுவுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் அவர் இன்னும் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. மந்திரி பதவியை தொடர்வாரா? இல்லையா? என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஜார்ஜ் குரியனின் ராஜினாமா நிகழ்ந்துள்ளது. எனவே விரைவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.