மும்பை,
மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியில் 'சிவ்ஷாஹி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று, குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார். குழந்தையின் உடலை கைப்பற்றினர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய, அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், அங்கு வசிக்கும் 10 வயது சிறுமி, அந்த குழந்தையை தூக்கி 6-வது மாடி திறந்தவெளி துவாரம் வழியாக கீழே தள்ளிவிடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் போலீசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளனர். அதில், சிறுமி செய்த கொடூர குற்றத்தை மூடிமறைப்பதற்காக, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு கண்காணிப்பு கேமராக்களை அணைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளதாக குற்றம் சாட்டினர். கண்காணிப்பு கேமரா காட்சியின் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த 10 வயது சிறுமியிடமும், ஆதாரங்களை மறைக்க முயன்றதாக கூறப்படும் அவரது பெற்றோர், உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.