போபால்,
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இரண்டு சகோதரிகள் தங்கள் கணவர்களை மாற்றிக்கொள்ள விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டை தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு சகோதரிகளும் தங்களது திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லை என்றும், ஒருவரின் கணவரை மற்றொருவர் ஏற்று கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இந்த மாற்றத்தை செய்ய விரும்புவதாகவும் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திரமான வழக்கு ஒட்டுமொத்த கோர்ட்டையும் அதிர வைத்துள்ளது.
இந்த வழக்கு முதலில் ஒரு கடத்தல் மனுவாக கோர்ட்டிற்கு வந்துள்ளது. ஆனால், விசாரணையின் போதுதான் இரு சகோதரிகளும் தங்களது கணவர்களை மாற்றி கொள்ள விரும்புவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் வேறு சில காரணங்களால் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் கணவர்களுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். கோர்ட்டு இந்த மனுவை விசாரித்த பிறகு, இது போன்ற கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. திருமண உறவுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டவை என்பதை கோர்ட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
கோர்ட்டில் இந்த வழக்கு முடிவடைந்தாலும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் இதனை விசித்திரமான சம்பவம் என்றும், குடும்ப உறவுகளின் மதிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர். சிலர் திருமண வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை சட்டபூர்வமாக தீர்க்க வேண்டும் என்றும், இத்தகைய முடிவுகள் சரியில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.