தேசிய செய்திகள்

விண்வெளி ஆய்வில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்-சுனிதா வில்லியம்ஸ் பேச்சு

விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு என்பது அற்புதமானதாகும் என்று சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

பெங்களூரு அருகே துமகூரு ரோட்டில் மாதவரா பகுதியில் சர்வதேச கண்காட்சி மையம் அமைந்துள்ளது. இங்கு 'விண்வெளியின் அடுத்த அத்தியாயம்: ஆய்வு, அறிவியல், புதுமை' என்ற தலைப்பில் விண்வெளி கண்காட்சி நடந்து வருகிறது. இதையொட்டி நடந்த கருத்தரங்கில் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:- எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளி பயணம் மேற்கொள்ளவும். நிலவு மட்டுமல்லாது அதை தாண்டி செல்லவும் சர்வதேச அளவில் ஒன்றிணைந்து ஒத்துழைப்போடு செயல்படுவது அவசியம். அப்போது தான் விண்வெளி சாதனையில் மனிதகுலம் வெற்றி அடையும். விண்வெளி ஆய்வுகளை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்த்து அதன்மூலம் அனைவரும் பயன்பெற முடியும்.

விண்வெளி ஆராய்ச்சி

விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு என்பது அற்புதமானதாகும். ஏனெனில் மற்ற நாடுகள் எவ்வாறு அதை சிந்தித்து பிரச்சினையை தீர்க்கிறார்கள் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களது ஆய்வுகள், செய்முறைகள், விண்வெளி உடைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் புதிய பிரச்சினைகளை தீர்க்க முடியும். எதிர்கால விண்வெளி மையங்கள் மனிதர்களுக்கு மிகவும் சுயசார்பு சிந்தனையுடன் தகவல்களை வழங்குவதாக அமையும். உங்கள் கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும், உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் விடைகளை பெற முடியும். சர்வதேச விண்வெளி மையத்தில் தகவல் களஞ்சியம் இல்லை. நாங்கள் பூமியில் இருந்தவர்களுடன் தான் தொடர்பில் இருந்து தகவல்களை பெற்றோம்.

தகவல் களஞ்சியம்

ஆனால் எதிர்கால விண்வெளி மையங்கள், குறிப்பாக நிலவை தாண்டி வெகுதூரம் பயணிக்கும்போது, சில இலக்குகளை நோக்கி செல்லும்போது தகவல் தொடர்பு தாமதம் இல்லாமல் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு தகவல் களஞ்சியம் விண்வெளி மையத்தில் இருப்பது அவசியம். அப்படி இருந்தால் தான் தாமதமின்றி நம்மால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். விண்வெளியில் சேகரிக்கும் தகவல்களை மீண்டும் பூமிக்கு அனுப்பாமல், அங்கு வைத்தே 3 பரிமாணங்களில் அந்த மாதிரியை நகல் எடுத்து, தகவல்களை ஆய்வு செய்யும் அளவுக்கு விண்வெளி மையத்தில் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

புதிய சிந்தனைகளை கொண்டு விண்வெளி மையங்களையும், வி-சாட் வகையான சிறிய ரக வணிக நோக்கத்துடனான மையங்களையும் அமைக்க வேண்டும். அப்போது தான் நம்மால் ஒரு வேலையை மிக விரைவில் செய்ய முடியும். தற்போதுள்ள விண்வெளி மையம் மிகவும் பெரிதாக பாதுகாப்பானதாக இருந்தாலும் அது எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT