புதுடெல்லி:
தனது வேண்டுகோளை மக்கள் ஏற்றதால் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத்
நிகழ்ச்சியில் உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று தனது 135 வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது; மேற்கு ஆசியாவில் நிலவும் போர் போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களிடம் சில வேண்டுகோள்களை வைத்திருந்தேன். குறிப்பாக, முடிந்தவரை சில காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்று ஆதரவு அளித்ததுடன், அதனை நடைமுறையிலும் மக்கள் பின்பற்றி வருவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விடுத்த கோரிக்கைகளை மக்கள் ஏற்றதால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது; மக்கள் தங்களின் பழைய தங்கத்தை பயன்படுத்தி புதிய நகைகள் வாங்குவதை கடைபிடித்தனர்; திருமணத்துக்கு கூட பல குடும்பங்கள் தங்கம் வாங்குவதை தவிர்த்தன. பல குடும்பங்கள் தங்களது அனுபவங்களை எனக்கு தகவல்கள் மூலம் பகிர்ந்துள்ளன. கார் பூலிங் (ஒரே வாகனத்தில் இணைந்து பயணம் செய்தல்) குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை தெரிவித்துள்ளனர். முன்பு தினமும் ஒரே இடத்திற்கு தனித்தனியாக பயணம் செய்தவர்கள், தற்போது ஒன்றாகச் சேர்ந்து பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்” என்றார்.
அமெரிக்கா- ஈரான் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு கோரிக்கைகளை நாட்டு மக்களுக்கு விடுத்து இருந்தார். வீட்டிலிருந்தே பணியாற்றுதல், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், உள்நாட்டு பொருட்களைப் பயன்படுத்துதல், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுகோள்களை பிரதமர் மோடி முன்பு விடுத்திருந்தார்.