தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த வாகனத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

ஆவணங்களை சரிபார்த்த பிறகு நகைகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியின் சாரம் பகுதியில், சென்னையை நோக்கி சென்ற வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் இருந்த 5 பெட்டிகளில் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நகைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள நகைக்கடைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். நகைகளுக்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு நகைகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.