தேசிய செய்திகள்

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு; மத்திய அரசு அதிரடி

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

டெல்லி,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதிக்கா இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 10ம் தேதி தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் நுகர்வை மிச்சப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொரோனா காலத்தை போன்றே வீட்டில் இருந்தே வேலை செய்வது, ஆன்லைன் மீட்டிங், வீடியோ கான்பிரஸ் போன்ற முறைகளை மக்கள் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு திருமணத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறும், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும், ஆடம்பர செலவு செய்வதையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் நிலைமையை சமாளிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரித்து அது தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயர காரணமாக அமைய உள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் பட்டியலில் 2வது இடத்திலும், வெள்ளியை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகளில் முன்னிலையிலும் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்த சூழ்நிலையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1 ஆயிரத்து 840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ. 230 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 330க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கிலோவுக்கு ரூ. 15 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.