மும்பை,
பஹ்ரைனில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 2 பயணிகளிடமிருந்து ரூ. 2.09 கோடி மதிப்புள்ள 1.68 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் இருந்து இன்று (புதன்கிழமை) மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு 2 பயணிகள் வந்தடைந்தனர். இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த அந்த பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின்போது அவர்கள் தங்களின் உள்ளாடைகளுக்குள் மெழுகு வடிவிலான தங்கத் துகளை மிக சாதுரியமாக மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்த 1.68 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 2.09 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரிடமும் இந்த கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.