தேசிய செய்திகள்

அரசு டாக்டர்கள் தனியாக தொழில் செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் அவலநிலை குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது.

புதுடெல்லி,

அரசு டாக்டர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற கருத்தை சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

விசாரணை:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் அவலநிலை குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. அங்குள்ள அரசு டாக்டர் ஒருவர். தடையை மீறி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதாகக் கூறி இந்த வழக்கு முதலில் தொடங்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தனியார் நர்சிங் ஹோம்களில் பணிபுரிந்து வருவதாகவும், அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதாகவும் ஐகோர்ட்டு கடந்த மே 4-ம் தேதி கவலை தெரிவித்திருந்தது. அரசு போதுமான நிதி மற்றும் வசதிகளை வழங்கிய போதிலும், டாக்டர்களின் இத்தகைய செயல்பாடுகளாலேயே அந்த அரசு மருத்துவமனையின் நிலைமை மோசமடைந்து உள்ளதாக ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது. மேலும் தனியாகத் தொழில் செய்யும் அரசு டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும் ஆணையிட்டது.

தனியாகத் தொழில்:

இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, அந்த மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சந்தோஷ்குமார் சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யாபாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அப்போது நீதிபதி பி.வி.நாகரத்னா கூறுகையில், "ஐகோர்ட்டு ஒரு பெரிய பொதுநலன் சார்ந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறது. அரசு டாக்டர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது என்ற இந்த நோக்கம் மிகவும் நல்லது. நீங்களும் ஒரு டாக்டர்தான். இந்த நடவடிக்கைகள் தனிப்பட்ட முறையில் உங்கள் மீது மட்டும் எடுக்கப்பட்டவை அல்ல. தனியாகத் தொழில் செய்யும் அனைத்து அரசு டாக்டர்களுக்கும் எதிரானதுதான்" என்று குறிப்பிட்டார்.

மனு திரும்பப் பெறப்பட்டது:

சுப்ரீம் கோர்ட்டு தனது மனுவை நிராகரிக்கப் போவதை உணர்ந்த மனுதாரரின் மூத்த வக்கீல் பிரதாப் சர்மா. மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்தனர்.