தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தால் இடைநீக்கமாக கருதப்படும்: சுப்ரீம் கோர்ட்டு

ஊழியர் அளித்த புகாரின்பேரில் விஷ்வஜீத் சிங் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் இருந்தால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

ஜாமீன் ரத்து

பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் அரசுக்கு சொந்தமான சாதர் ஆஸ்பத்திரியின் நிர்வாகியாக இருப்பவர் விஷ்வஜீத் சிங். அவர் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு ஒப்பந்த ஊழியரின் ஊதிய நிலுவைத்தொகையான ரூ.36 ஆயிரத்துக்கு ஒப்புதல் அளிக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடரபாக அந்த ஊழியர் அளித்த புகாரின்பேரில் விஷ்வஜீத் சிங் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தார். பின்னர், செசன்சு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் அளித்தது. ஜாமீன் உத்தரவை எதிர்த்து, பாட்னா ஐகோர்ட்டில் ஒப்பந்த ஊழியர் மேல்முறையீடு செய்தார். அதன்பேரில், கடந்த ஜூலை 1-ந் தேதி அவரது ஜாமீனை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

லஞ்சத்தொகை சிறியது

அந்த உத்தரவை எதிர்த்து விஷ்வஜீத் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீதான விசாரணைக்கு பிறகு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்வஜீத்துக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியதுடன், பாட்னா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குற்றம்சாட்டப்பட்ட விஷ்வஜீத் சிங், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு பிறகு பாட்னா ஐகோர்ட்டு தலையிட்டுள்ளது. லஞ்சத்தொகை சிறியது என்று செசன்சு கோர்ட்டு கூறியது. ஐகோர்ட்டின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது தெரிகிறது.

குற்றப்பின்னணி

கேட்கப்பட்ட லஞ்சத்தொகை எவ்வளவு என்பது ஜாமீன் மனுவை தீர்மானிப்பதற்கு பொருத்தமற்றது. இருப்பினும் ஜாமீனை ரத்து செய்யாமல் ஐகோர்ட்டு அந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம். பொதுவாக இத்தகைய வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்று பார்த்து ஜாமீன் வழங்கப்பட வேண்டும். குற்றப்பின்னணியோ குற்றம் கடுமையாகவோ இருந்தால் ஜாமீன் வழங்க மறுக்கலாம். இவ்வழக்கில் ஒரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்ட விஷ்வஜீத் சிங்கின் பணிநிலை மற்றும் மறுநியமனம்தான்.

இடைநீக்கம்

கைது செய்யப்பட் பிறகு அவர் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் இருந்ததாக தெரிகிறது. ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் இருந்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும். அதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. விஷ்வஜீத் சிங் முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதே ஆஸ்பத்திரியில் அதே பதவியில் நியமிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு விரைவில் கவனம் செலுத்தி, சட்டத்துக்குட்பட்டு தேவையானதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

SCROLL FOR NEXT