தேசிய செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசு; செஸ் வீராங்கனை குமுறல்

பஞ்சாப் அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறி விட்டது என சர்வதேச போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற செஸ் வீராங்கனை குமுறலை வெளியிட்டு உள்ளார்.

ஜலந்தர்,

பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த செஸ் வீராங்கனை மாலிகா ஹண்டா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில் ஹண்டா வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநில அரசு தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் விளையாட்டு துறை மந்திரி பண பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின்பு, கடந்த டிசம்பர் 31ந்தேதி விளையாட்டு துறை மந்திரி பர்கத் சிங்கை சந்தித்தேன். அவர், காது கேளாதோர் விளையாட்டுக்கு, அரசு வேலை தரவோ அல்லது பரிசு எதுவும் அளிக்கவோ முடியாது. அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு துறை மந்திரி கூறியவற்றை பர்கத் சிங்கிடம் கூறினேன். ஆனால் அவர், நான் கூறவில்லை. முன்னாள் மந்திரி கூறியுள்ளார். அரசால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.

காங்கிரஸ் அரசில் என்னுடைய 5 ஆண்டு காலங்கள் வீணாகி விட்டன. என்னை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர். காது கேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குமுறலுடன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT