தேசிய செய்திகள்

வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி அபராதம்; புதிய மசோதா கொண்டுவரும் மத்திய அரசு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேவேளை, வினாத்தாள் கசிவை தடுக்க ஏற்கனவே உள்ள சட்டத்தில் அவசரமாக திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய மசோதா

அதன்படி, பொதுத்தேர்வுகள் (தவறான வழிகளை தடுப்பது) சட்டம் 2024ல் திருத்தம் கொண்டுவர மத்திய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், வினாத்தாள் கசிவு, தேர்வுகளில் தவறான வழியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்டால் ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல், வினாத்தாள் கசிவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு (Organised crimes) ஈடுபட்டால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்தம் மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால் அது சட்டமாக உருவெடுக்கும்.

வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றங்கள் விசாரணை 2 மாதங்களுக்குள் நிறைவு பெற வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த 3 மாதங்களில் இந்த வழக்குதொடர்பான விசாரணையை விரைந்து நடத்த அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விரைவு கோர்ட்டுகளை அமைக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதா திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.