Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

மக்கள் எங்களை வெறுப்பதற்காகவே "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்திற்கு வரிச்சலுகை- பரூக் அப்துல்லா

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளன.

புதுடெல்லி,

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் வரிச்சலுகை வழங்கியுள்ளன.

இந்த நிலையில் இப்படத்திற்கு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியது குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்:

மக்களின் இதயங்களில் மேலும் வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்கே வரிச்சலுகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போலீஸ்காரரும், ராணுவ வீரரும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கூறுகிறார்கள். இது எங்கள் மீது மேலும் வெறுப்புணர்ச்சியை தூண்டும்.

ஹிட்லர் மற்றும் கோயபல்ஸ் இதேபோன்று உருவாக்கிய நிலைமைக்கு ஆறு மில்லியன் யூதர்கள் அப்போது விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் எத்தனை பேர் விலை கொடுக்க வேண்டும் என எனக்குத் தெரியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT