அகர்தலா,
திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தன்முரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் தந்தை பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். சிறுமியின் தாய் உயிரிழந்த நிலையில், தந்தை மறுமணம் செய்துகொண்டதால், அந்தச் சிறுமி தனது தாத்தா (70) மற்றும் பாட்டியுடன் தங்கிப் படித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த சிறுமியின் தந்தை, தாத்தா மீது புகார் அளித்துள்ளார். அவர் சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில், தாத்தாவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, மரணத்திற்கான முழுமையான காரணம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.