புதுடெல்லி,
தாத்தாவிடமிருந்து தனது தந்தை வாரிசுரிமையாகப் பெற்ற சொத்தில், பேரன் பங்கு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவின்படி, ஒருவர் தனது தந்தையிடமிருந்து சொத்தைப் பெற்றவுடன், அவர் அந்தச் சொத்தின் முழுமையான உரிமையாளராகிவிடுகிறார் என்றும், அந்த சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அந்தச் சொத்தை விற்பனை செய்வது, தனது மகன்களுக்கு உரிமை வழங்காமல் இருப்பது உள்பட, அவர் விரும்பியபடி அதை நிர்வகிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மகன் தொடர்ந்த 29 ஆண்டுகால வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
மனுதாரர் இந்த வழக்கை 1997ல் தாக்கல் செய்தார். வழக்கில் குறிப்பிட்ட சொத்தானது, பூர்வீகச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்து என்றும், அதில் தனக்கு உரிமை இருப்பதாகவும் கூறியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தனது தந்தையின் வசம் உள்ள சொத்தைப் பிரித்துத் தருமாறு பேரன் உரிமை கோர முடியாது என்று தெரிவித்தனர்.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ஐச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஒரு இந்து ஆண் உயில் எழுதாமல் இறக்கும் பட்சத்தில், அவரது சொத்து வாரிசுரிமை எவ்வாறு அமையும் என்பதற்கான விதிகளை விளக்கினர். அதாவது, ஒரு மகன் தனது தந்தையிடமிருந்து வாரிசாகப் பெறும் சொத்துக்கு அவரே முழு உரிமையாளராகிறார், அத்தகைய சொத்தின் மீது, அவரது சொந்த மகனுக்குப் பிறப்பாலேயே எந்த உரிமையும் கிடைத்துவிடாது என்று கூறினர்.
மேலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், ஒருவரின் மகனின் மகன் (பேரன்) 'முதல் வகுப்பு வாரிசுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.