போர்ட் பிளேர்,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் ‘கிரேட் நிக்கோபார்' திட்டம் ஒரு மிகப்பெரிய மோசடி என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மத்திய அரசு இங்கு ‘கிரேட் நிக்கோபார்’ திட்டத்தை மேற்கொள்வதாக கூறுகிறது. ஆனால் இங்கு நான் பார்த்தவரை, இது மேம்பாட்டு திட்டம் இல்லை, சுமார் 160 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள மரங்களை அழிப்பதற்கான திட்டம். இங்குள்ள பழங்குடிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் வாழ்விடம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
92 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கிரேட் நிக்கோபார்’ மேம்பாட்டு திட்டம் மிகப்பெரிய மோசடி. இங்குள்ள மரங்கள் அனைத்தும் மிகப் பழமையானவை. பல தலைமுறைகளாக இங்குள்ள பூர்வக்குடி மக்களுக்கு வாழ்வளித்து வந்த காடுகள், தற்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் நினைத்தால் இதனை தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நிக்கோபார் தீவில் சர்வதேச துறைமுகம், விமான நிலையம், நகரமைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.