தேசிய செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம்;மத்திய அரசு மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

அந்தமான் மற்றும் நிகோபார் தீவின் பயண அனுபவ வீடி யோவை வெளியிட்டு கிரேட் நிகோபார் திட்டம் ஒரு தொழில் அதிபருக்கு பயன் அளிப்பதை நோக்கமாக கொண்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தும், காடுகள், ஆழ்கடலில் நீந்தி பவளப்பாறைகளை ஆய்வு செய்ததுடன், உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

ராகுல் காந்தி வீடியோ

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒவ்வொரு இளம் இந்தியரிடமும் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். நீங்கள் எத்தகைய இந்தியாவை பெற விரும்புகிறீர்கள்? சூதாட்ட விடுதிகளுக்காக மழைக்காடுகள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டு, பவளப்பாறைகள் வரைபடங்களில் இருந்து அழிக்கப்பட்டு, பழங்குடி சமூகங்கள் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நாம் சுவாசிக்கும் காற்று விஷமாக மாற்றப்பட்ட ஒரு இந்தியாவையா? அல்லது இந்தியாவின் இயற்கை பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு, நமது பழங்குடி சமூகங்கள் பாதுகாப்பாக இருந்து, முன்னேற்றம் இயற்கைக்கு எதிராக அல்லாமல் அதனுடன் இணைந்து செயல்படும் ஒரு இந்தியாவையா?

மக்களால் தடுக்க முடியும்

ஒரு தொழில் அதிபரின் லாபத்துக்காக 1% கோடிக்கும் அதிகமான மரங்கள், பழமையான பவளப்பாறைகள், ஈடுசெய்ய முடியாத மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இது உங்கள் பரம்பரை சொத்து. இதை அவர்கள் புல்டோசர் கொண்டு அழிக்கிறார்கள். உங்களால் மட்டுமே அவர்களை தடுக்க முடியும். நான் இந்தியாவின் தென்கோடி முனைக்கு சென்றேன். இந்திரா முனையில் நின்றேன். பூமியின் மிகச்சிறந்த பவளப்பாறை பகுதிகளில் நீந்தினேன். அங்கு வசிக்கும் மக்களுடன் பேசினேன். பழங்குடியின சமூகத்தினர், முன்னாள் ராணுவத்தினர் என பலரையும் சந்தித்தேன். இவர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கவில்லை. மோடி அரசும் பா.ஜனதாவும் 'கிரேட் நிகோபார் திட்டம்' என்பது பாதுகாப்பு தொடர்பான ஒன்று என்று உங்களிடம் கூறுகின்றன. ஆனால் அது பாதுகாப்பு தொடர்பான திட்டம் அல்ல.

பவளப்பாறைகள் அழிப்பு

உண்மையில் 12 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. அதிகாரப்பூர்வ வரைபடங்களில் இருந்து பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன. இந்தியாவின் ஈடு இணையற்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தில் ஒரு தொழில் அதிபர் ஓட்டல்களையும், சூதாட்ட விடுதிகளை கட்டுவதற்காக ராணுவத்தினரும் பழங்குடியினரும் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த தீவுகள் உலகம் இதுவரை கண்டராத மிக சிறந்த, நிலையான சூழல் கொண்ட இடமாக திகழ முடியும். அத்தகைய இந்தியாவுக்காகவே போராட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.