தேசிய செய்திகள்

மதுபோதையில் மணமேடைக்கு வந்த மாப்பிள்ளை... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவுக்கு குவியும் பாராட்டு

திருமணத்தை நிறுத்துவதாக கூறியதால் மணமகன் வீட்டாருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராய்ப்பூர்,

திருமண மேடைக்கு மதுபோதையில் தள்ளாடிக் கொண்டே வந்த மாப்பிள்ளையைக் கண்டு, திருமணத்தை அதிரடியாக நிறுத்திய இளம்பெண்ணின் துணிச்சலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருமண ஏற்பாடு

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர் முஸ்கான் பிரதான்(வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாந்த் ராம்(வயது 24) என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த 23-ந்தேதி இவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுபோதையில்...

அன்றைய தினம் மணமகன் வீட்டார் மாப்பிள்ளை சாந்த் ராமை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு மணப்பெண் வீட்டிற்கு வந்தனர். அப்போது சாந்த் ராம் மதுபோதையில் இருந்துள்ளார். அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை. தள்ளாடிக் கொண்டே நடந்து வந்த சாந்த் ராமை, அவரது நண்பர்கள் கைத்தாங்கலாக பிடித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர்.

மணப்பெண்ணின் அதிரடி முடிவு

இதனைக் கண்டு மணப்பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். திருமண மேடைக்கு வரும்போது கூட மாப்பிள்ளை இவ்வாறு போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மணப்பெண் முஸ்கான் கொதித்தெழுந்தார். தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசிய அவர், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

முஸ்கானின் முடிவை அவரது பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். அதே சமயம், முஸ்கானின் இந்த அதிரடி முடிவால் மணமகன் வீட்டாருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது இளம்பெண் முஸ்கான் போலீசாரிடம், சாந்த் ராமின் குடிப்பழக்கம் குறித்து தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், மது அருந்துவதை நிறுத்திவிடுவேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததால் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் தெரிவித்தார். மேலும், திருமணத்தை நிறுத்துவது தொடர்பான தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் சாந்த் ராமின் குடும்பத்தினரிடம், முஸ்கானின் விருப்பம் இல்லாமல் திருமணத்தை நடத்த முடியாது என்று கூறி அவர்களை அங்கிருந்து கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், திருமண ஏற்பாடுகளுக்கான செலவுகளுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.3 லட்சத்தை கொடுக்க சாந்த் ராம் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

குவியும் பாராட்டு

மணமேடைக்கு மாப்பிள்ளை குடித்துவிட்டு வந்ததால் அதிரடியாக திருமணத்தை நிறுத்திய இளம்பெண்ணின் துணிச்சலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. விஜய் குமார் பாண்டே, இளம்பெண் முஸ்கானை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இளம்பெண் முஸ்கான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் தனது படிப்பை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.