காந்தி நகர்,
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒரு இளைஞர் (வயது 25). இவர் குஜராத் மாநிலம், ராஜுலா வனப்பகுதிக்குட்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வேலையை முடித்து விட்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு தாமதமாக ஓட்டலில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென்று புதரில் இருந்து வெளியே வந்த ஒரு விலங்கு, அந்த இளைஞர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. மேலும் அந்த இளைஞரைக் கடித்துக் குதறி கொன்றுள்ளது. பின்னர் இளைஞரின் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளது. சில பாகங்களை அங்கேயே விட்டுச் சென்றுள்ளது.
ராஜுலா வனப்பகுதிக்குட்பட்ட கோவயா கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையில், அந்த இளைஞரின் தலையும், சில உடல் பாகங்களும் கிடந்தன. இன்று அதிகாலையில் இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் காலை 6 மணியளவில் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் சிங்கத்தால் கொல்லப்பட்டதும், மேலும் 4 சிங்கங்கள் சேர்ந்து கும்பலாக அந்த பகுதிகளில் சுற்றித்திரிவதும் தெரியவந்தது.
“அந்த 4 சிங்கங்களையும் மீட்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் ” என உதவி வனத்துறை அதிகாரி விரால்சிங் சாவ்தா கூறினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருகிலுள்ள பகோதர் கிராமத்திலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கோவாயா கிராம பஞ்சாயத்து தலைவர் ஜீனா லக்னோத்ரா கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ராஜுலா சட்டமன்ற உறுப்பினர் ஹிரா சோலங்கி கூறியிருப்பதாவது:-
"மனிதர்கள் சிங்கங்களுக்கு இரையாகும் விதம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி மாநில வனத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.