புதுடெல்லி,
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தும் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டு நோக்கிப் பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளனர்.
அதில், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) நிறுத்தவும், ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்த உள்ளனர். இது தொடர்பாக சந்திப்புக்கு நேரம் கேட்டு, தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரசார் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து இருப்பதாக கோர்ட்டு வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்திக்க நேரம் கேட்டு நானும், ராகுல் காந்தியும் கடிதம் எழுதினோம். இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் சந்திக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அவரிடம் சூழ்நிலைகளை பற்றி எடுத்து கூறுவோம். நாட்டில் ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை பற்றி அவரிடம் தெரிவிப்போம்.அவரிடம் மிக பணிவுடன் எங்களுடைய கோரிக்கையை வைப்போம் என்றார்.