தேசிய செய்திகள்

அந்தமான் கடலில் பிரமாண்ட எரிவாயு புதையல் கண்டுபிடிப்பு

இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்போர் தாக்குதல் நடத்தின. இதில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க போர்ப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை செலுத்தியும் மரண தாக்குதல் நடத்தியது.

எரிபொருள் தட்டுப்பாடு

இதனை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா மீது அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஈரான் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் இஸ்ரேலையும் நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தியது.

இதற்கிடையே பாகிஸ்தான். ஓமன் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே ஈரான் மீது தற்காப்புக்கான தாக்குதல் என அமெரிக்காவும் அதன் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேலும் தாக்குதலை நடத்தி சீண்டியது. இது நேரடியாக தற்காலிக போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.

தற்காலிக போர் நிறுத்தம்

இதனால் தற்காலிக போர் நிறுத்தத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இன்றுடன் ஈரான் மீதான அமெரிக்கா மற் றும் இஸ்ரேல் தாக்குதல் 101-வது நாளை எட்டி உள்ளது. லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பதற்றமான  சூழல் நிலவுகிறது.

இந்தியா எரிபொருள் விவகாரத்தில் அண்டை நாடுகளையே சார்ந்து இருக்கிறது. வளைகுடா போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கியாஸ் விலையும் பெட்ரோல் விலையும் உயர்ந்து வருகிறது.

அந்தமான் கடற்பகுதி

இது ஒருபுறம் இருக்க, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக இந்தியாவில் எங்கு எரிவாயு கிடைக்கும் என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வரப்பிரசாதமாக மத்திய அரசின் ஆழ்கடல் ஆய்வு திட்டமான சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் அந்தமான் கடற்பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப் புரி வெளியிட்ட அறிக்கையில்

எரிவாயு புதையல்

அந்தமான் தீவுகளின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் -3 பகுதியில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் ( புதையல்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணற்றில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிவாயு கிணற்றில் இருந்து 30 முதல் 40 ஆண்டுகள் வரை தடையின்றி தொடர்ந்து எரிபொருளை எடுக்க முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

1,900 மீட்டருக்கு அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள், தொடர்ச்சியான எரிப்பு மூலம் இயற்கை எரிவாயுவின் இருப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எரிவாயுவின் தன்மையை மதிப்பிடுவதற்காக ஆயில் இந்தியா நிறுவனம் மாதிரிகளை சேகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை ஒரே அடியாக 30 சதவீதம் வரை உயர்த்தும் என நம்பப்படுகிறது. இந்த எரிவாயுவை எடுப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதால், இந்திய அரசு 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கியுள்ளது.