தேசிய செய்திகள்

அரியானா: 85 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர் - தொடர்ந்து படிக்க ஆர்வம்

கடந்த 2023-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை லால் சந்த் கோதாரா நிறைவு செய்தார்.

சண்டிகர்,

அரியானாவின் சிர்சா பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் லால் சந்த் கோதாரா(வயது 85). இவர் தனது இளமைக் காலத்தில் பாதியில் நின்ற தனது கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என்று விரும்பினார். இதன்படி 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது 76-வது வயதில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

கடந்த 2023-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்த லால் சந்த் கோதாரா, தொடர்ந்து முதுகலை படிப்பை தொடங்கினார். இந்நிலையில், தற்போது தனது 81-வது வயதில் லால் சந்த் கோதாரா முதுகலைப் படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.

தனது 20-வது வயதிற்கு முன்பே ராணுவத்தில் இணைந்த லால் சந்த் கோதாரா, பின்னர் அரியானா போக்குவரத்துத் துறையில் யார்டு மாஸ்டராக பணியாற்றினார். 2002-ல் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் காட்டிய அவர், 'மாஸ்டர்ஸ்’ தடகள போட்டிகளில் பங்கேற்று, அரியானா மாநில அளவிலான போட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் பதக்கங்களையும் வென்றார்.

தற்போது முதுகலைப் பட்டம் பெற்றுள்ள லால் சந்த் கோதாரா, அடுத்ததாக முனைவர் பட்டம் (PhD) அல்லது சட்டப் படிப்பு பயில்வது குறித்து பரிசீலித்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், “வாழ்க்கை சூழல் தன்னை வேறு திசைகளில் பயணிக்க வைத்ததால், கல்வி என்பது வாழ்க்கையில் ஒரு முழுமையடையாத அத்தியாயமாகவே எஞ்சியிருந்தது. கற்றலுக்கான ஆர்வம் எந்த வயதிலும் நின்றுவிடக் கூடாது. கல்வி ஒருவரின் கண்ணோட்டத்தை விரிவுபடுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT