புதுடெல்லி
வங்கக்கடல் புயலால் ஒடிசாவில் மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி நரேஷ் குமார் இன்று கூறும்போது, தென்கிழக்கு வங்கக்கடலின் மேல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடையும் என கூறினார்.
அது பின்னர் 16-ந்தேதி மாலை வங்கக்கடலின் தெற்கு மத்திய பகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேற்குமத்திய பகுதிகளில் சூறாவளி புயலாக தீவிரமடைய கூடும்.
அதனால், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரப்பூர்வ வானிலை மைய தகவல் மற்றும் எச்சரிக்கையை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனால், ஒடிசாவின் கடலோர பகுதிகளில் இன்று முதல் 18-ந்தேதி வரை 4 நாட்களில் பரவலாக மழை பெய்ய கூடும். ஒடிசாவின் மயூர்பாஞ்ச், தேன்கானல், ராயகடா, கந்தமால் மற்றும் பவுத் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடி, மின்னலுடன் கூடிய மழை பொழியும்போது, மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதேபோன்று 18-ந்தேதி ஒடிசாவின் கஞ்சம், கஜபதி, பூரி மற்றும் கோர்மா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கக்கூடும். இதற்கு முன்பு அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரு புயல்கள் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவாகி கடையை கடந்தன.
அப்போது, அர்னாப் புயலால் ஒடிசாவில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் முரசு புயலும் தாக்கம் ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மற்றொரு புயலால் ஒடிசாவில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் அதற்கேற்ப பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.