மும்பை
மராட்டியத்தில் கனமழை எதிரொலியாக மும்பை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இதனால், 24 மணிநேரத்தில் 204.4 மி.மீட்டருக்கும் கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தது. இந்த அளவுக்கு மழை பெய்யும் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.
இந்நிலையில், மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நேற்று கனமழை பெய்தது. இதனால், மும்பையில் மரம் முறிந்து விழுந்ததில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் கனமழை எதிரொலியாக மும்பை, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலனை கவனத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மும்பை, தானே, பால்கர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு உள்ளது. எனினும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். தொடர் கனமழை, பலத்த காற்று வீசுவது, அதிக உயரத்திற்கு அலை எழும்புவது ஆகிய சூழலால், தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர வேண்டும் என்று மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.