தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.9.67 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடமும், அவர்களது உடைமைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பெங்களூரு,

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய ரூ.9.67 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள்

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதனால் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் கும்பலை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது பற்றிய ரகசிய தகவல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து. பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடமும், அவர்களது உடைமைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணியிடம் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது.

ரூ.9.67 கோடி மதிப்பு

அந்த பயணி தனது உடைமைகளுக்குள் உயர்ரக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து, அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 12 கிலோ 100 கிராம் உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 24 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல், பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியும் உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்திருந்தார். அவரையும் அதிகாரிகள் கைது செய்தார்கள்.

அந்த பயணியிடம் இருந்து 15.5 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 கோடியே 43 லட்சம் ஆகும். ஒட்டு மொத்த உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.9 கோடியே 67 லட்சம் ஆகும். இது தொடர்பாக கைதான 2 பயணிகள் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT