தேசிய செய்திகள்

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்த் பிஸ்வா சர்மா நாளை பதவியேற்கிறார்; பிரதமர் மோடி பங்கேற்பு

அசாமில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 82 தொகுதிகளை கைப்பற்றியது.

கவுகாத்தி,

கடந்த மாதம் 9-ந்தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்ட மாக நடந்தது. அதில், மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் தற்போதைய முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா. முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஹிமந்த பிஸ்வா சர்மா. கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார்.

கவர்னர் ஏற்றுக்கொண்டதால் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான புதிய அரசின் பதவி யேற்பு விழா, நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.