தேசிய செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கில் குடும்பத்துடன் உயிர் தப்பிய இந்தி நடிகர்

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் இருந்து உயிர் தப்பியது தொடர்பான தகவலை இந்தி நடிகர் அங்குர் ரத்தன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

மும்பை,

நாங்கள் தங்கியிருந்த ஓட்டல், வெள்ளப்பெருக்கு நடந்த இடத்தில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவில்தான் இருந்தது. இறைவனின் கிருபையால் நாங்கள் உயிர் தப்பியுள்ளோம் என்று இந்தி நடிகர் அங்குர் ரத்தன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் பதற்றம்

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இந்திய சுற்றுலா பயணிகளின் நிலை என்னவென்று தெரியாமல் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

உயிர் தப்பிய இந்தி நடிகர்

இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியில் இருந்து உயிர் தப்பியது தொடர்பான தகவலை இந்தி நடிகர் அங்குர் ரத்தன் உருக்கமாக பகிர்ந்துள்ளார். இவர் 'மாய்' இந்திப்படம் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தனது மனைவி ஷில்பா மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 22-ந்தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றடைந்தார். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன், நடிகர் அங்குர் ரத்தன் தனது குடும்பத்துடன் அதே ரசுவா பகுதியில் புகைப்படம் எடுத்துள்ளார்.

"என் இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது"

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கைலாஷ் யாத்திரையை தொடங்கினோம். வெள்ளம் வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் நானும் என் மனைவியும் அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த ஓட்டல், விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவில்தான் இருந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய சில மணிநேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. இறைவனின் கிருபையால் நாங்கள் உயிர் தப்பியுள்ளோம். ஆனால், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்தால் என் இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறது," என்றார்.