தேசிய செய்திகள்

பிரதமர் மோடி காசா மக்களுக்கு நீதி கோருவார் என நம்புகிறோம் - பிரியங்கா காந்தி

காசாவில் நடந்த இனப்படுகொலை குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றமான கினெஸ்செட்டில் உரையாற்றுகிறார். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கூட்டாகத் தயாரித்தல், மேம்படுத்துதல் தொடர்பாக இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இனப்படுகொலை பற்றி குறிப்பிடுவார் அவர்களுக்கு நீதி கோருவார் என்று நம்புகிறோம்.

இந்தியா உலகிற்கு உண்மை, அமைதி மற்றும் நீதியின் ஒளியை தொடர்ந்து காட்ட வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.