விபத்தில் சிக்கிய வாகனங்கள் 
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 7 பேர் பலி

விபத்து குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலக்கலூரிபேட்டை அருகே ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிறந்தநாள் விழா

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலக்கலூரிபேட்டை மண்டலம் வேலூரு கிராமத்தைச் சேர்ந்த 15 பேர், பாபட்லா மாவட்டத்தில் உள்ள கொண்டமஞ்சுளூரு கிராமத்தில் நடைபெற்ற தங்களது உறவினரின் பிறந்தநாள் விழாவில் நேற்றிரவு (புதன்கிழமை) பங்கேற்றனர். விழா முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் அனைவரும் ஒரே ஆட்டோவில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

விபத்து

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சிலக்கலூரிபேட்டை அட்டா ரோடு தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்துகொண்டிருந்தது. அப்போது விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஆட்டோ முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது.

7 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த போந்தா பாபு (வயது 62), போந்தா மானேம்மா (வயது 55), சம்பூர்ணம்மா (வயது 70), லட்சுமம்மா (வயது 75) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும், குண்டூர் மற்றும் சிலக்கலூரிபேட்டை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி கங்கம்மா (வயது 50), சவுட்டுபள்ளி சுவார்த்தா (வயது 45), மாரியம்மா (வயது 45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

8 பேருக்கு தீவிர சிகிச்சை

விபத்தில் படுகாயமடைந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் குண்டூர் அரசு பொது ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிலக்கலூரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

துணை முதல்வர் இரங்கல்

இந்த விபத்து குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, தனியார் பேருந்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.